இன்றுதான் படத்தொகுப்பு ஆரம்பமாகிறது...
சந்தர்ப்பமும், சூழ்நிலையும் பின்னோக்கி இழுக்க,முன்னோக்கி பாயவேண்டும் என்கிற ஆவேசத்தில் எனக்கு பரிச்சயமில்லாத சில ஒளிப்பதிவு கருவிகளையும் பயன்படுத்தியிருந்தோம்..இதனால் தொழில் நுட்பத்தில் தேர்ந்த, தினசரி நவீனங்களிலும், இணையத் தளங்களிலும், அறிவு தேடலிலும் தன்னை நுழைத்துக் கொள்கிற படத் தொகுப்பாளரின் தேவை இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக பேச்சு கோவிந்தனிடமும், மகேந்திரனிடமும்,இருந்தன. அகவே அவர்களது படத்தொகுப்பு கூடத்தில் பதிவிறக்கம் செய்யும் பணி தொடங்கியது. எனது சிந்தனைகள் அங்கே இல்லை. தொடர்ந்த நாட்களில் எனக்கு ஏற்பட்ட மன பிறழ்வின் மாற்றமே இது. காட்சிகள் சிறு திரையில் ஓடத்தொடங்கின. நுண் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஒளிப்பதிவு கருவியில் பதிவுகள் திரையில் தோன்றியது. எனது நினைவுகள் காட்சி நடந்தேறிய சூழ்நிலையை தானே உள்வாங்க துவங்கியது.
அது ஒரு கொடூரமான நாள்.
பீ-டூ என அழைக்கப்பட்ட ஒளிப்பதிவு கருவியில் இருந்த முதல் நாள் காட்சி திரையில் ஓடத் துவங்கியது.
செல்வி பச்சையை பற்றி கேவலமாக பேசிவிட்டு அழுத படியே செல்ல, ஆற்றாமை தாங்காமல் கிழவர் பச்சையை அடித்துக் கொண்டே அழுவார்...இதுதான் காட்சி...
தாளாத துயரமாக அந்த காட்சி இருந்தாலும் உள்ளுக்கும், வெளியேயும் எனக்குள் வெடித்த சந்தர்ப்பங்களை தொலைந்து, அந்த காட்சியை எப்படியாவது எடுத்து முடித்து இன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவஸ்தையில் இருந்தேன்.
எல்லாரும் என்னை கைவிட்டு விட்டார்கள். நான்கு நாட்களாக உச்சத்தில் இருந்த பிரச்சனைகளின் மையப் புள்ளி அந்த நாள். இனி படப் பிடிப்பு தொடருமோ, தொடராதோ என்கிற கடைசி தருணத்தில் ஒளிப்பதிவாளர் அன்பு ஸ்டாலினின் தைரிய உற்சாகத்தில் நான் மேற்கொண்ட முயற்சி..
ரெட் ஒன் என்கிற ஒளிப்பதிவு கருவியின் சொந்தக்காரர்களின் சதியா அல்லது எனக்கு தயாரிப்பாளர் என்கிற பெயரில் அசோக் நடந்து கொண்ட விதமா எதுவும் புரியவில்லை...என்னைச்சுற்றி இருந்த உலக வெளிச்சம் அத்தனையும் தடை பட்டிருந்த நேரம் அது. இனி மீளவே முடியாது என்கிற கடைசி நுனியில் தவித்துக்கொண்டிருந்த அகால பொழுது அது. ஒன்று படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற தீராத பிணியில் நீடித்திருந்த சமயம் அது. ஆதரிக்க யாருமில்லை. முடிவெடுக்கும் கணங்களும் அருகில் இல்லை. உலக மனிதர்கள் எல்லாம் என்னை குத்தீட்டி கொண்டு கூர்வாளால் குத்திக்கொண்டு இருந்தனர். தொழிலாளர்களுக்கு ஒட்டு மொத்தமாக துரோகமிழைத்து போலி ஜனநாயகத்தின் அங்கமாய் நிற்க வேண்டிய கட்டாயம். நான் உணர்ந்திருந்த மார்க்ஸ் என்னை மென்று தின்று பார்த்தார். அறிவு என்பது ஒரு வகை ஏமாற்று. தான் வளர்வதற்காக பிறரை சுரண்டும் இன்றைய சூட்சுமம் என்று போதித்த நானே அதுவாகி போன களம். யாரிடமும் பேச முடியவில்லை. என்னுடன் பணியாற்றிய சக கலைஜர்களின் முகம் இறுகி கிடந்தது. இந்திய சினிமாக்கள் போதித்த ஒளிப்பதிவு கருவியிலிருந்து வேறு கருவிக்கு மாறியது எல்லாருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இது எனது மன நிலையை பல கூறுகளாக சிதறியடித்தது.
சொந்த ஊரில் படம் பிடிக்க வந்தது முதல் குற்றம். எந்தவித பாசாங்கும் இல்லாமல் மக்களில் ஒருவனாக நின்றதால், சினிமா ஏற்படுத்திய மாயவெளியில் எனது ஊர் கூர்ந்து என்னை நோக்கிய தருணம். அதே ஊரில் இருந்து இயக்குனர் வாய்ப்புக்காக ஓடிய நான்கு பேரில் நானும் ஒருவன்.அவர்களுக்கு கிட்டாத வாய்ப்பு எனக்கு கிட்டியது. இதை நான் சரியாக பயன்படுத்த வேண்டும் என்கிற துடிப்பில் முதல்,முதலாக ஒரு விசயத்தை உடைத்தேன். உடையும் தருணங்கள் மிகக்கொடூரமானவை.
ஆம் அதுவும் ஒரு கொடூரமானது...
அது பச்சை தங்கையின் திருமணம் நடக்க வேண்டிய மண்டபம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் ரெட் ஒன் ஒளிப்பதிவுக் கருவியாளர்கள் நாங்கள் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் காசோலையை போட்டு வங்கியில் பணம் இல்லை என்பதால் கிளம்பி விட்டார்கள். அந்த தொகையை மறுநாள் காலை நான் கொடுப்பதாக சொல்லியும் கேட்க தயாராக இல்லை. இதுவரை எல்லோருக்கும் படிகள் சரியாக கொடுக்கப்படும். அவர்கள் கேட்கவில்லை.
பெரம்பலூரில் ஒரு திருமண மண்டபம் பார்த்து வைத்து இருந்தோம். நாளை மறுநாள் எடுப்பதாக முடிவு. அதற்குள் இவர்கள் மொத்தமும் கிளம்ப, என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். ரெட் ஒன் உரிமையாளர் பேசிய பேச்சுக்கள் என்னை நெருப்பில் உயிரோடு சுடுவதை போல இருந்தது.
"பணம் கொடுக்க வக்கில்ல... நீ எல்லாம் சினிமா எடுத்து என்ன செய்யப்போற.. நான் போலீஸ்க்கு போன் பண்றேன். ரிட்டர்ன் ஆன செக்க வச்சி உங்கள இனிமே படம் எடுக்க விடாம செயப்போறேன்" என கத்தினார்.
தொடர்ந்து நடக்க வேண்டிய படப்பிடிப்பு அப்படியே நின்றது. அதற்கு முதல் நாள் ராஜேஷிடம் பணம் கொடுத்து அனுப்புவதாக சொன்ன அசோக்கும் கொடுத்து அனுப்பவில்லை. இதற்கு மேல் நிறுத்தி விடுங்கள் என்று ராஜேஷ் வந்து சொன்னான். ராஜேஷ் எனது உதவியாளர். அவனைத்தான் சென்னையில் அசோக் தொகுத்து தரும் பணங்களை கொண்டு வர சொல்லி இருந்தேன். அவனிடமும் பணம் இல்லை.
ரெட் ஒன் கிளம்பியதால் மொத்த படப்பிடிப்பு குழுவையும் அனுப்பி ஆக வேண்டும். கையில் பணம் இல்லாததால் திருமண மண்டப அலங்காரங்களை கூட செய்ய முடியாமல் ஒரு திருமணம் நடக்க இருந்த மண்டபத்தை தேர்வு செய்து, அவர்களிடம் திருமணம் நாளை முடிந்ததும் நான் வரும் வரை அலங்காரங்களை அகற்ற வேண்டாம் என கெஞ்சி இருந்தேன்.
அப்படித்தான் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் நடந்தது. கையில் ஒரு ரூபாய் கிடையாது. அவ்வப்போது அசோக் அனுப்புகிற பத்தாயிரமும், ஐயாயிரமும் படப்பிடிப்பில் ஒரு மணி நேரத்திற்கு கூட தாங்காது. கிடைக்கும் இடங்களில் படம் பிடித்தோம். அவ்வளவுதான். நாளைக்குள் அவர்களுக்கு முழுவதாக பணம் தருகிறோம் என சொல்லி ஒரு நாள் தள்ளிப்போட்டேன்.
யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. எல்லா முகங்களும் என் மீதே கவிழ்ந்து இருந்தன. 5.30க்கே படப்பிடிப்பை முடித்துக்கொள்வதாக சென்னைக்கு கிளம்பி விட்டேன். கதை நாயகியை வேறு இன்றுதான் கேரளாவில் இருந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக வர வைத்து இருந்தோம். அவளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம்.
மது விடுதிக்குள் நுழைந்தேன். நான் மதுவை எப்பொழுது குடித்தாலும் மிக சுவையாக குடிப்பது வழக்கம். எந்த சூழ்நிலையிலும் இது மாறாது. நான் எப்பொழுதும் என்னை சுற்றியே இயங்குவதால் என்னிடமிருந்து என் நிதானத்தை துறந்து வார்த்தைகளை விடக்கூடாது என்பது எனது வைராக்யமாகவே இருந்தது. அதையும் தாண்டி பிறர் வைத்திருந்த மதுவையும் செர்த்துக் குடித்தேன். என்னால் அந்த கணத்தை தாங்க முடியவில்லை. தொழிலாளர்களுக்காக தொடர்ந்து பேசுகிற நான், அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாமல், எனது படத்தையும் அவர்கள் உப்புமா படமாக எண்ணும்படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் என்கிற ஆதங்கமும், என் மீதே கவிழ்ந்த பொறுப்பும் இனி வாழவே கூடாது என்ற முடியும் ஏற்பட்ட கணம் அது...
என்னுடன் வந்திருந்த சிவாவின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு யாரிடமும் சொல்லாமல் நான் மட்டும் கிளம்பினேன்.
கண்ணீரும், அழுகையும் உடைத்துக்கொண்டு ரணமாய் ஓடியது.
எதோ தவறு நடக்க போகிறது என உணர்ந்த சிவா உடனே வேறு வாகனத்தில் என்னை பின் தொடர்ந்து இருக்கிறான். நான் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. என் கண்ணுக்குள்ளே மகன் வைகறையாளன், மகள் மதிவதனியின் முகமே வந்து, வந்து போனது.
வாகனத்தை ஓட்ட முடியவில்லை.
ஊரைத்தாண்டி நெடுந்தொலைவில் ஆலத்தூர் போகும் வழியில் சுடுகாடு ஒன்று இருந்தது. அங்கே போனதும் எனது எண்ணம் இன்னும் வேறாய் மாறியது. இதோ இந்த சுடுகாட்டில்தானே எனது அண்ணன்கள் இருவரையும் எரித்தோம். மொத்தமாக எங்களது வாழ்நாள் நம்பிக்கையை எரித்த இடம் இதுதானே.
இங்கேயே...இங்கேயே...நானும் எரிவேன்...எனது சந்ததியினர் மாண்டு சாம்பலான அதே இடத்தில் நாமும் நம்மை தொலைப்போம் என வண்டியை அப்படியே விட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து அழுதேன்.
"அப்பா... நீ ஏன் என்னை விட்டுட்டு போன... நீங்கள்லாம நான் இப்படி கேவலமா சாகறத பார்க்க கூடாதுன்னு போயிட்டிங்களா?"...
எனது கதறல் சுடுகாட்டின் அருகே இருந்த புளிய மரத்தில் பட்டுத்தெரித்தது. அதற்குள் சிவா அங்கே ஓடோடி வந்துவிட்டான். அவன் வேகமாய் என்னை பிடித்து இழுத்தான். அவன் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கையில் அப்படி ஒரு மோசமான மனநிலையுடன் கூடிய மனிதனின் முகத்தை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிவாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதேன். சிவா நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து எனது அண்ணன் சங்கருக்கு அலைபேசியில் பேசினான். நான் எனது முடிவிலிருந்து மாறவே இல்லை.
No comments:
Post a Comment