திலகா...அடர்ந்த வார்த்தைகளால் பின்னப்பட்ட முகம்..எங்களுக்கு தெரிந்து எங்க பள்ளியோடத்துக்கு தினம் ஒரு சட்டை போட்டுட்டு வறது இவ மட்டும் தான்..படிக்கறதிலையும் கெட்டி.ஐந்தாவதுக்கு கூட டியுசன் படிப்பது எங்க ஊர்ல இருக்கற இருக்கிற சில பேர்ல இவளும் ஒருத்தி..வாத்தியார் எது கேட்டாலும் டியுசன்ல படிச்சத வச்சி பட்டு பட்டுன்னு பதில் சொல்லிடுவா..எப்பவும் பௌடர் போட்டு ரெட்டை சடை பின்னி பூ வச்சிக்கிட்டு வரத்தும் இவ ஒருத்திதான்..இன்னிக்கு கனகாம்பரம் வச்சிருந்தா..
நான் அப்பராசு கடையில் எடுத்தது வரிக்கி ..சற்று பெரிய பொட்டணமாய் இருந்ததால் திருட்டுத்தனமாக எனது புத்தக பையில் வைக்க கடினமாக இருந்தது..எப்பதான் அவ பார்த்துட்டா..எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை..தவக்களை அவளை பார்த்து வையில் கை வைத்து அதட்டலாக போ என்கிறான்..அவளோ சொல்லுவேன் என பதிலுக்கு சைகை பண்ண நானும் தவக்களையும் மத்த பசங்களுக்கு சாடை காட்டிட்டு.,வேகமா போயி,
"உனக்கும் தரேன் சொல்லாத"
குசுகுசுன்னு சொல்ல,எனக்கு வேணாம் வேணாம் என அவள் சொல்லி விட்டு கடைக்காரனை பார்க்க தவக்களை சட்டென அவள் வாயை பொத்தி வேகமா இழுக்க,அவள் திமிர.."டேய் வாங்கடா "என கத்தி விட்டு நாங்க எடுத்தம் பாரு ஓட்டம் இளந்தோப்பு போய்த்தான் நின்னம்..
எல்லோருக்கும் மேல்மூச்சி கீழ் மூச்சி வாங்க...எங்கள் அனைவருக்கும் வெட, வெடத்தது...
திலகா இந்நேரம் அப்பராசுவிடம் சொல்லியிருப்பாள். அப்பராசு பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பார். குண்டு வாத்தி இந்நேரம் எங்கள் வீட்டுக்கு பசங்களை அனுப்பிருப்பான். இப்படி எண்ணங்கள் ஓடியது. இளந்தோப்பில், இளஞ்சூட்டில் கிடந்த பாறையில் அமர்ந்த படியே நாங்கள் திருடிய சூசுபரிகளையும், மைசூர்பாக்கையும், தேனு முட்டாயையும் பார்த்தபடியே இருந்தோம். நேரம் ஆக,ஆக... பயம் பசியாகி திருடியதை தின்ன ஆரம்பித்தோம். இளந்தோப்பு குட்டையில் கிடந்த நீரை குடித்தும் பசி ஆற வில்லை. தவக்களை ஒருவனை தண்ணிரில் தள்ளி விட்டான். உடனே எல்லாரும் தண்ணிரில் குதித்தோம். எங்க கூட இருந்த ரகு எங்களை விட உயரமாக இருப்பான். ஆனால் நீச்சல் இப்பத்தான் கத்துக்கிட்டு இருக்கான். அதனால அவன் மட்டும் மேலயே உட்காந்துகிட்டன்.
மத்தவங்க பசிய மறக்க ரொம்ப நேரம் நீச்சல் அடிச்சோம்.. அதுக்குள்ள ரகு புளிய மரத்துல இருந்து புளியம்பிஞ்சி, புளியன்கொளுந்து,புளியம்பூ எல்லாத்தையும் பிச்சி ,வெடி வச்சி ஒடைச்ச பாறையில் வெடி வண்டியோட இரும்பு ராடு இறங்கி அங்கங்க குழி மாதிரி இருக்கும்.அந்த குழியில எல்லாத்தையும் போட்டு கூரான கருங்கல்லால உரல்ல இடிக்கிற மாதிரி இடிச்சி, கையில மிச்சமிருந்த தேனு முட்டாயையையும் போட்டு அதக்கி சோறு மாதிரி செஞ்சி வச்சிருந்தான். குளிச்சிபுட்டு ஈர தலையோட, ஈர சட்டையோடு மேல ஏறி வந்து கடுஞ்சூடு ஏறி கிடந்த பாறையில் படுத்துக் கிடந்தோம்.
பாறை வெயில் எங்களை ஒண்ணுமே செய்யாது. ஏன்னா, நான் எப்பவும் பள்ளி விடுமுறையில காட்டுக்கு போனா பருத்தி செடி நெழல படுத்து தூங்குற ஆளு.நெழலு நான் துங்க ஆரம்பிக்கிறப்ப மட்டும்தான் இருக்கும். சூரியன் மேல ஏற, ஏற நெழலு வெயிலா மாறி உடம்ப சுட்டு எடுக்கும். ஆனா அதுல ஒரு மாதிரி சுகம் இருக்கும். அப்படியே கரு மண்ணும் உடம்ப சுடும். ரெண்டு சூடும் சேர்ந்து என்ன இன்னும் நல்லா தாலாட்டும். ஆளுங்க பருத்திய பொறுக்கி இடுப்புல ஒரு துணி கட்டி அதுலதான் சேர்ப்பாங்க. மொத்தமா சேர, சேர அத மூட்டையில அடக்குவாங்க. எல்லா ஆளுக்கும் தூரத்துல போற பழனி முருகன் பஸ் அடிக்கிற ஆரன்தான் நேரம். அடுத்த ஊரு போற வரைக்கும் ஆரன் அடிச்சிட்டே போவான். அதான் ஆளு காலையிற நேரம்.
அப்புறமா, எங்கம்மா பய சாப்டாம கிடக்கிறான்னு காடு பூரா தேடும். நான் படுத்திருக்கிற பருத்தி செடி, போதும் போடான்னு ஒரு பருத்தி காய உடம்பு மேல எரியும். அப்புறந்தான் அம்மா கூப்பிட்டது என் காதுல விழும். அப்பறம் அம்மா என்ன கூட்டிட்டு போய் தென்னை மரத்துல தொங்க விட்ருக்க தூக்கு வாளிய எடுத்து சோறு போடும். எனக்கு இலையில சாப்பிடருதுன்னா அவ்ளோ ஆனந்தம். நானே ஓடிப்போய் கொட்டைத்தழைய பறிச்சிட்டு வந்துருவேன். கொட்டைதழையோட அடித்தண்ட பத்திரமா வச்சிருப்பேன். அது எதுக்குன்னா நொரை பூண்டு முட்டை விடுறத்துக்கு.
தண்ட இறக்கி தண்ணியில ஊற வச்சிட்டா, அதே சோப்பு மாதிரி நுரை தள்ளும். அது இல்லாட்டி எள்ளுத்தழை... அந்த நுரை தண்ணிய ஊதினா வரும் பாரு.. மொட்டு, மொட்டா ஆவாரம் பூ மாதிரி நுரை மொட்டு... வாய், முகம், கன்னம் எல்லா இடத்திலையும் நுரை மொட்டு பாக்க அவளவு அழகா இருக்கும். அதுக்குதான் இந்த கொட்டை தண்டு.
அம்மா கம்மஞ்சோத்து உருண்டைய கொட்டை தலையில எடுத்து வச்சிக்கிட்டு, எம்புட்டு உயரத்துல கட்டி உட்டாலும் இந்த நெருப்பு எறும்பு விடாம துரத்தி, கண்டுபுடிச்சி சோத்த திங்க வந்துரும். வரதுல பாதிக்கு, பாதி தண்ணியில உசுர உட்ரும். சில கம்மஞ்சோத்த தின்னுப்புட்டு தண்ணியில மயக்குதுல மிதந்து கொஞ்ச நேரம் கழிச்சி அதுகளும் செத்து போகும் . எப்பவுமே இப்படிதான். நாங்க எறும்பு சோறு சாப்பிடிறது வழக்கமா போச்சி. கிட்டதிட்ட எல்லா விவசாயிகளுக்கும் இதான் வச்சுக்கிங்களேன். அம்மா கூட சொல்லுவா எறும்ப எடுத்து போடாம சாப்பிடு.. அது கண்ணுக்கு நல்லதுன்னு..
எங்க கண்ணு எல்லாம் குட்டை தண்ணியில குளிச்சதுல செவந்து கிடந்தது. ரகு எல்லாருக்கும் நொனா பழத்தையும், புளியஞ்சோத்தையும் வச்சி கொடுத்தான். எல்லாரும் நல்லா தின்னம். அப்பத்தான் பள்ளியோடம் உடுற பெல்லு சத்தம் கேக்குது. எல்லாரும் பயந்து, பயந்து பள்ளிக்கூடத்திருக்கு போனால், கள்ளிகாட்டான் குருவி சத்தம் தவிர பள்ளிக்கூடத்துல ஒத்த ஆளு இல்ல. அங்க இருந்து பயந்து, பயந்து வீட்டுக்கு போனால் வீட்டுல யாரும் இல்ல. காட்டுல இருந்து இன்னும் யாரும் வரல... எப்படியும் ஆறு மணியாயிடும்னு தெரியும்.
மெல்ல நடந்து பாய் தெருவுக்கு போனேன். பயம் எனக்குள்ள அப்படியே இருந்தது. திலகா வீடு இருக்கிற தெருவா இருந்தாலும், எங்க வீடு இருக்கிறது இது வரைக்கும் அவளுக்கு தெரியாது. சுத்தி,முத்தி பார்த்துகிட்டே நடந்தேன். யாரோ பார்க்கிற மாதிரி தோணவும் திரும்பி பார்த்தேன். ஒரு சன்னல்ல நின்னு என்னையே உத்துப் பாத்துட்டு இருந்தா திலகா. நான் அவள பார்க்க, அவளோ எதுவும் நடக்காத மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு... அது இப்பவும் மனசுல தங்கி கிடக்கிற சிரிப்பு...
எதார்த்தமான வாழ்க்கை பதிவு.... மேலும் படிக்க தூண்டுகிறது.
ReplyDelete